சைஞ்...சைஞ்!

"ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலயில்லே!" - என்றென்றும் ராஜா, இல்ல! அதுக்குப் பிறகு ஒரு பாடலை நான் அத்தனை முறை தொடர்ந்து கேட்டது, இந்த பாடலை தான்.

பாடல்சைஞ்...சைஞ்!
பாடியவர்மகிழினி மணிமாறன்
(என்ன ஒரு பெயர்! அதுவும், இதுவே இவருக்கு முதல் பாடலாம்!)
பாடலாசிரியர் தெரிந்தால் சொல்லவும். நன்றி.
இசையமைப்பாளர் இமான்
படம்கும்கி
இயக்குனர்பிரபு சாலமன்

நான் இங்கு ஒன்றும் பெரிதாக சொல்லப்போவதில்லை. ஏதோ, எனக்குத் தோன்றுபவற்றை தோன்றுவன போலவே சொல்ல விழைந்துள்ளேன். சரி, பாடல் இதோ.

சைஞ்...சைஞ்!


சைஞ்...சைஞ்!

கையளவு நெஞ்சத்துல கடலளவு ஆச மச்சான்
அளவு ஏதுமில்ல... அது தான் காதல் மச்சான்
நாம ஜோரா மண் சேரா விட்டாலும்
நெனப்பே போதும் மச்சான்!

சைஞ்...சைஞ்!

 • முதல் இரண்டு வார்த்தைகளிலேயே என் மனதில் உதித்தது - கே.பி-யின் 'கையளவு மனது' தான்.
 • 'கையளவு நெஞ்சம், கடலளவு ஆசை' - நான் தினமும் பார்த்த, பார்க்கிற, பார்க்கப் போகிற கணக்கற்ற அளவிலான மக்களின் நிலை - இந்த வரி தான். பெரும்பாலும், எல்லாம் 'வரவு எட்டணா செலவு பத்தணா' வகையறா. குற்றம் சொல்ல என் தாத்தா இப்பொழுதில்லை, தாய்-தந்தையருக்கு நேரமில்லை, எனக்கு வயதில்லை, சிலருக்குத் துணிவில்லை, பிறாருக்கு பொறுப்பில்லை, பலருக்குத் தேவையில்லை. அளவிலா காதலும்கூட, இப்போதும் எப்போதும் அளவாயிருத்தலே மேல் என்பவன் நான்; மனதின் பிடியில் இருப்பதைவிட மூளையின் பிடியில் இருத்தலே சிறந்ததென்கிறேன், உலகநன்மை கருதி.
 • காதலுக்குக் கண் மட்டுமல்ல, அளவும் இல்லை!
 • மேலிரண்டு வரிகளில் முக்காலக் காதலும் அதன் கதைகளும் தான் தோன்றின - அதாவது ஒருவருக்கொருவர் இணையாவிட்டாலும் ஒவ்வொருவரும் ஒருவரோடு இணைதலும், முந்தைய ஒருவரையே நினைப்பதே இருத்தலும்!
 • எனினும், மகிழினி என்னை மகிழவும் நெகிழவும் வைத்தார்!

வானளவு கிட்டத்துல வரப்பளவு தூரம் மச்சான்
அளவு தேவையில்ல... அது தான் பாசம் மச்சான்
நாம வேண்டி கொண்டாலும் வேண்டா விட்டாலும்
சாமி கேக்கும் மச்சான்!

சைஞ்...சைஞ்!

 • வேண்டுவன மிக அருகில் இருந்தும், ஏதோ ஒன்று நமைத் தடுப்பதுபோலவே தான் காதலும் - என்பது தான் எனக்கிங்கு தோன்றுவது. பல்லாயிரம் பாடல்கள் மனதில் உதித்தாலும் வார்தையோன்ருமே வெளிவராததுபோல்! சரியோ பிழையோ, துளியும் அறியேன்!
 • மனிதன் வேண்டினாலும் வேண்டாவிட்டாலும் வேண்டாவேருப்பாயாவது தெய்வம் வழி செய்யும் - என்பது ஆத்திகர்களின் வாக்கு/வாதம். எது எப்படியோ, 'எல்லாத்தையும் மேல இருக்கறவன் பாத்துப்பான்'-னு விட்டுவிடுவதும் சில சமயம் நிம்மதியளிப்பதே! *ஆனா கவுண்டர் ஒத்துக்க மாட்டார்! :|*

ஏடளவு எண்ணத்துல எழுத்தளவு சிக்கல் மச்சான்
அளவுகோலே இல்ல... அது தான் ஊரு மச்சான்
நாம பேருக்கு நன்ம செஞ்சாலே
அதுவே போதும் மச்சான்!

 • வட்டெழுத்தில் தொடங்கி வால்மார்ட் எல்லாமே சிக்கல் தான் போலும்!
 • குற்றம் பார்ப்பின் சுற்றம் இல்லை, ஊரோடு ஒத்து வாழ் - என்றெல்லாம் என்னதான் சொன்னாலும், ஊரைச் சகித்து வாழ்வதும் ஒரு தனி கலையே.
 • தன் சொல்படி செய்யாவிடில் நம்மைத் தூக்கி எரியும் சமூகத்திலும், நாலு பேருக்கு நன்மை செய்வதென்பது 'நாயக'-நால் தான் முடியும்!

நாடளவு கஸ்டத்துல நகத்தளவு இஸ்டம் மச்சான்
அளவுகோடே இல்ல... அது தான் நேசம் மச்சான்
நாம மாண்டு போனாலும் தூக்கி தீ வைக்க
உறவு வேணும் மச்சான்!

சைஞ்...சைஞ்!

 • துன்பத்திலும் இன்பம் காண அனைவராலும் இயலாது; நிச்சயம் என்னால் முடியாது.
 • இவ்விடத்தில் என் நினைவுக்கு வருவது ஒன்று தான் - 'உதிரிப்பூக்கள்' படத்தின் இறுதிக் காட்சி. அப்படி ஒரு மரணத்திற்குள்ளாவதென்றால் இப்படியோர் பிறவியைப் பெறாமலிருப்பதே மொக்ஷத்திற்கிணையாகும்.
 • ஒருவனது இறப்பில் சுற்றி நின்று அழுவோரின் எண்ணிக்கை அவன் வாழ்நாளில், தான் செய்த நன்மை-தீமைகளுக்கேற்றார்போலவே அமையும் - என்று எனது சிறு வயதில் யாரோ ஒருவர் சொல்லக் கேட்ட ஞாபகம்.
 • ஹ்ம்ம், எனினும் எனது மரணத்திற்கு அழுவோரை என்னால் காணமுடியாதென்பது வருத்தமளிப்பதே.

கையளவு நெஞ்சத்துள...கடலளவு ஆச மச்சான்
அளவு ஏதுமில்ல... அது தான் காதல் மச்சான்
நாம காலம் எல்லாமே கையில் சேந்தாலே
கவலை எது மச்சான்!

சைஞ்...சைஞ்! 

 • இல்லை. கவலையே இல்லை. சிறிதும் இல்லை.

மொத்தத்தில், இமான் அவர்களுக்கும் மகிழினி அவர்களுக்கும் என் நன்றிகள்!

Comments

Popular posts from this blog

A Tamilian's Tribute to an Apple

Kuru kuru kangalile...

Out at the Lakes