வார்த்தையின் வேட்கை


நினைக்காண நான்வந்தும் நா-வராது போவதேனோ !
மனமுவந்து மான்வந்தும்-என் மண்-நிலாதி ருப்பதேனோ
தேந்தமிழ் தீந்தமிழ் பைந்தமிழ் இவையிருந்தும்
உன் அமிழ்திலாதி ருப்பது மேனோ !

நின்போல் ஒருத்தியை முன்னமே செய்யாததே
பிரமனின் சிரம்கொய்ய சிவனவன் காரணமோ !
அமரர் அனைவரும் நினையறிந்திருப்ப ரெனில்
பார்க்கடல் கடைதலும் தடைபட்டி ருந்திடுமோ !

ஓர்துளிப் புன்னகை கசிய நேர்ந்தாலும்
வள்ளியைத் தள்ளியே வேலவன் வருவனோ !
கோபிகையர் கோபித்துக் கண்ணனும் கிடப்பனோ
கோகுலக் கூட்டத்தில் கோகிலம்நீ கிடந்திருந்தால் !

பற்களைக் கண்டுதான் முத்துக்கள் தோன்றினவோ
கூந்தலைக் காண-மயில் தோகை விரித்தனவோ
சருமம் படர்ந்திடவே-பட்டுப் பூச்சிகள் பிறந்தனவோ
கண்களைச் சுற்றிடவே-மை நிறத்தை இழந்ததுவோ !

உனையுறைக்க அகத்தியன் தமிழ்மொழி படைத்தனனோ
விவரிக்க வேண்டிடவே இலக்கணம் எழுதினனோ !
பேராசை கொண்டுதான் இலக்கியம் ஆற்றினனோ
பெண்ணாசை பெறுதலும் பெரியதென் றறிந்தனனோ !

-வ.ர.ராகவன்

Comments

Popular posts from this blog

A Tamilian's Tribute to an Apple

வேண்டாம் மைத்துனா வேண்டாம்!

Belur & Halebidu - II