காதல் கானல்
மனதெனும் மேகத்தில் மோகமும் மூண்டதுவோ
கேட்டதும் காதலனைக் காலனவன் காட்டினனோ
தொட்டதும் தன்முகம் தீயெனத் தோன்றியதோ
பட்டதும் பாடல்கள் பாவைநான் பாடினனோ!
கணவனாய்க் கொண்ட கனவெலாம் வெறுங்கனவோ
தனிமையில் நான்வடித்த கண்ணீரும் பெருங்கடலோ
பசியோடு பார்த்திருந்தஇப் பேதையைப் பார்த்தனனோ
மாயமாய் வந்தென்னை மாய்த்தவனும் மாயவனோ!
வார்த்தையே வாராது வாடியவள் வந்துளனோ
கண்டுமே காணாது களைத்தவனைக் காண்கிறனோ
தாகமும் தாபமும் தந்தவன் தடைதிணிக்க
பாசமும் பூசையும் பூண்டவள் பூவுளளோ!
கசப்பும் களைப்பும் கலந்தே கிடக்க
மங்கைஎன் மனமும் மணமும் மாய்ந்திட
சிரிப்பும் சிலிர்ப்பும் சீராய்ச் சிறக்க
நீயும் நூறாண்டு நலமாய் நசியவே!
- வ.ர.ராகவன்
Comments