இராசராசப்பா

கிள்ளி வழியுதித் தோங்கியு யர்ந்தானை

கிள்ளைத் தமிழ்தேவா ரத்தினை மீட்டானை

அள்ளிப் பெருஆ வுடையார் அளித்தானை

சொல்லிப் புகழ்பா டிடு.



சோழர்களில் கிள்ளி வளவன் வழிவந்து புகழில் ஓங்கி உயர்ந்தவனை

கிளி பேசும் கொஞ்சும் தமிழனுடைய தேவாரத்தினை மீட்டவனை

பொருளை அள்ளிப் பெருஆவுடையார் கோயிலை அளித்தவனை

அவனது பெயர் சொல்லிப் புகழ்பாடிடு.




சிங்கத் தமிழ்நாடி மீட்டபெரு கோவுடைய

வங்கத் தெறுழ்தேடி வென்றவொரு சேயுடைய

தங்கக் குமிழ்மூடி கொண்டபெரு ஆவுடைய

ராசரா சன்புகழ் நில்.



சிங்கத்தமிழை மீட்ட பேரரசனுடைய (/ இராசராசனுடைய)

வங்கத்து வலிமையைத் தேடிச் சென்று வென்ற இராசேந்திரனை மகனாய் உடைய

தங்கக் குமிழ் மூடி போர்த்தியது போல் கோபுரத்தைக் கொண்ட பெருஆவுடைய இராசராசனின் புகழ் நிற்கட்டும்.

Comments

dagalti said…
எதையுமே பாவாக்கும் பான்மை படைத்தோய்
சதயனை சாற்றினாய் நன்று - சிதையில்
பகையிட்ட சோழன் அருளாலே பாட்டில்
வகையுளி கொஞ்சம் தவிர்

தவிராது மோனையும் ஏனைத் தொடையும்
அவிராக இட்டொரு யாகம் - கவிராயர்
செய்திட செஞ்சுடர் சொல்தாண்டி சீராக
பெய்திடும் பாக்கள் பல

பலவகை பாமுயல் ஓசையைப் பற்றி
பலமுண்டு நும்சொல்லில் கண்டேன் - சொலவுண்டு
ஓர்குறை வெண்பா விதிநோக்கி ஓசையை
நீர்சற்று தள்ளுகி றீர்

தள்ளாமல் எல்லா விதியும் பொருந்திய
கள்ளப்பா மேலேநான் செய்தேனே - உள்ளத்தை
ஏதேனும் செய்ததோ? இல்லையே ஏனெனில்
காதே கவிக்குத் தலை

தலைகொண்டு சிந்தித்து செய்யும் கவிதை
நிலைகண்டு கொண்டக்கால் நன்றாய் - வலைகண்ட
சேலாக சிக்காது செல்வீரே சீராக
ஏலாத தில்லை இது
Raghavan said…
Saaaar! 🙏 Hope all is well at your end. Thanks for reading!

And இதுக்கே சில நாள் ஆச்சு, I'm still learning.

"காதே கவிக்குத் தலை" மட்டும் புரியல. முடிஞ்சா explain, please? 🙂
dagalti said…
காதே தலையெனில் ஓசை முதன்மையாம்
வாதேதும் இல்லை இதில்

இதிலொரு சௌரியம் ஓசைகை வந்தால்
விதியெண்ண வேண்டாம் விடு

விடுசரம் போலத் தொடர்குறள் செய்தால்
மிடுக்காய் மலரும் இசை

இசைவழி நீரே இயற்றவே காண்பீர்
இசைவாய் பொருந்தும் விதி

விதியை பயின்று பிறகே உணர்வோம்
கதியே கவிக்குத் தலை

Popular posts from this blog

A Tamilian's Tribute to an Apple

வேண்டாம் மைத்துனா வேண்டாம்!

Belur & Halebidu - II