கண்ணன் அனுபூதி by Crazy Mohan
திரு.கிரேஸி மோகன் அவர்களின் 70-வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் அவர் இயற்றிய 'கண்ணன் அனுபூதி'-யில் இருந்து சிலவெண்பாக்கள் இசைத்து வழங்கப்பட்டன. அவற்றை இங்கு தொகுக்க முயற்சித்துள்ளேன். விரைவில், இன்னொரு நிகழ்ச்சியில் இவை இன்னும் விரிவாகஇசைக்கப்படும் என்று திரு. மாது பாலாஜி அவர்கள் தெரிவித்தார்.
ஏதேனும் பிழைகள் இருக்குமாயின் தெரியப்படுத்தவும். நன்றி!
கண்ணபிரான் காயாம்பூ வண்ணபிரான் வெண்ணைமண்
தின்னபிரான் நற்கீதை சொன்னபிரான் பின்னமுரான்
முன்னவனாம் தென்மதுரை அன்னையவள் அண்ணனையே
எண்ணவரும் ஏகாந்தம் இங்கு
நானாய் பிறந்து வளர்ந்து பிணியென்ற
சாக்கில் இறந்து இல்லையாவது எதற்கு
சரணா கதியென்று சார்ந்து கிடப்போர்க்கு
அரணாய் நிற்கும் அரியே
எதற்கென்ற கேள்வி முதற்கொண்டு மாயை
உதிக்கின்ற ஞானமே எல்லாம் மதித்துத்
துதிக்கின்ற நானும் விதிக்கின்ற நீயும்
நதிக்கரை நாணல் நீர் நட்பு
இருப்பதிங் கொன்றே இதன்பெயர் கண்ணன்
மறுப்பதை விட்டென் மனமே கருப்பொருளைப்
பார்க்காத போது பாடிப் பரவசத்தில்
கார்கால மேகத்தில் காண்
களிப்பில் திளைத்துக் களைத்துச் சலித்து
புளிக்கும் பழமாம் இப்பூமி ஒளித்த
நிலத்தை வராகமாய் நெம்பிய ஆய
குலத்தோனின் கால்கண்கை கூப்பு
கூப்பிட்டால் ஆயர்க்காய் கூச்சலிட்டால் ஆனைக்காய்
சாப்பிட்டால் நட்புக்காய் சோர்வின்றி
ராதை கரம்விலக்கி கீதை உரைநிறுத்தி
ஆதரவுக் கோடும் அரி
அரிஆ தவனை அறியா தவரே
அறிய முயல்வார் அறிவால் எரியாது
ஒளிந்த நெருப்பை உணர மரத்தைப்
பிளந்த குருடனைப் போல்.
போல் என்று உவமை புகல முடியாது
மாலென் றனரோ மஹா கவிகள்
சிந்தனை தேவையா சித்திரத்திற்கு ஓவியா
எந்தனை வேறு வடிவாக்கு
வாக்கிலே பாரதி வார்த்தைகள் வந்திட
நாக்கிலே நம்மாழ்வார் நின்றிட நோக்கிலே
ஆண்டாளின் பக்தி அகலாது நின்றிட
வேண்டினேன் கண்ணா வழங்கு
வழங்கினாய் செல்வம் வழங்கினாய் சேலை
வழங்கினாய் கீதை வணக்கம் வழங்கிடும்
காலம் முடிந்ததோ கண்ணா மௌனமாய்
ஆலில் படுத்தாயோ ஆழ்ந்து
அன்பே எதுகையாய் ஆர்வமே மோனையாய்
உன்பால் தளையற்ற உந்துதலால் வெண்பாக்கள்
பாடி அணுகுகிறேன் வேடிக்கைக் கல்ல கண்ணா
வாடிக்கையாளனாக வா.
வாவென்றால் வாலிபன் வாக்கில் வயோதிகன்
தாவென்றால் கற்பகத் தாயவன் சோவென்று
மாரியருள் பெய்கின்ற காரிருள் கண்ணனே
வேறிருள் போக்கும் விளக்கு
விளக்கீசல் போலே வியலுலகில் ஈசா
உளத்தாசை கொண்டிங்கு உதிர்ந்தேன் அளப்பரிய
ஆதியே உந்தன் அனுபூதியில் மூழ்கிடும்
தேதியைச் சொல்லியெனைத் தேற்று
தேற்றி விஜயனைத் தேரேற்றி வில்லேந்த
சாற்றினாய் கீதையை சர்வேசா சேற்றினுள்
பஞ்சப் புரவிகட்கு அஞ்சிப் புதைந்திடும்
நெஞ்ச ரதத்தை நிறுத்து
Comments