வேண்டாம் மைத்துனா வேண்டாம்!
சமீபத்தில் வெளியான திரைப்பட பாடல் ஒன்றைப் பற்றி இங்கு எனது பார்வையைத் தெரிவிக்க வந்துள்ளேன். அது என்ன பாடல் என்பது இந்நேரம் உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆம். 'OK.OK' என்றழைக்கப்படும் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' என்ற படத்தின் 'வேணாம் மச்சான் வேணாம்' பாடல் தான்.
கலியுகக் கவிஞர் நா.முத்துகுமார் எழுத, நகலக நாயகர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, வேல்முருகன் மற்றும் நரேஷ் ஐயர் இப்பாடலைப் பாடியிருக்கின்றனர்.
மிகவும் அருமையான பாடல். மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல். எல்லாவற்றிற்கும் மேல், குறிப்பாக, பெண்களைப் பற்றி பல கருத்துக்களைக் கூறும் பாடல். இதில் ஆச்சரியம் என்னவென்றால், இது சங்க-காலத்துப் பாடலின் நடையைக் கொண்டிராவிட்டாலும், பண்டைய தமிழ்நாட்டின் பழக்க-வழக்கங்களைக் பிரதிபலிப்பதாய் அமைந்துள்ளது.
ஒவ்வொரு வரியையும் எடுத்து நமது கலாச்சாரத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
வஞ்சர மீனு வவ்வாலு, கிடைச்சா கெளுத்தி விரலு
இருக்கு மீச இராலு இறங்கி கலக்கு கோபாலு!
- பழங்காலத்தில் சமூகங்கள் பெரும்பாலும் நீர்-நிலை சார்ந்தே இருந்து வந்தன; ஆதலால் வஞ்சரை மீனும் கெளுத்தி மீனும் இராலும் ஓர் முக்கிய இடத்தை வகுத்திருக்கலாம்.
- இன்றளவும் வவ்வால் என்பது பழமையின் அடையாளம்.
- கோபால் என்ற பெயர் அக்கால வைணவ சமூகத்தின் தொன்மையைக் காட்டுவதாய் இருக்கலாம்.
வேணாம் மச்சான் வேணாம், இந்த பொன்னுங்க காதலு!
அது மூடி தொறக்கும்போதே உன்ன கவுக்கும் quarter-உ!
- ஒரு நண்பனை மைத்துனனாகக் கொள்வது ஒரு நாடறிந்த பழக்கமாய் இருந்து வந்திருக்கிறது. உதாரணத்திற்கு, அமரர் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' எனும் வரலாற்றுப் புதினத்தில் கூட, கந்தமாறன் முதலில் தன் தங்கையை தமது நண்பனான வந்தியத்தேவனுக்கே மனம் முடிக்க ஆசை கொள்வான். பிறகு வந்தியத்தேவனோ, தம் உற்ற நண்பரான அருள்மொழிவர்மனுடைய தமக்கை குந்தவை பிராட்டியாரை மணந்து கொள்வான்.
- இங்கு 'quarter' எனும் சொல், இக்காலத்தில் மதுபானத்தைக் குறித்தாலும், இது உண்மையில், "வாழ்க்கையில் நான்கில் ஒரு பங்கிற்குள், அதாவது, 25 வயதிற்குள் ஒரு மனிதன் மணம் முடித்தாக வேண்டும்" என்ற அக்காலச் சமூகக் கோட்பாட்டை எடுத்துரைக்கின்றது.
கடல போல காதல் ஒரு salt –உ water -உ
அது கொஞ்சம் கரிக்கும் போதே நீ தூக்கி போட்டுடு
- கடல் எவ்வளவு பெரிதோ, அது போல, உலகத்தாரின் உள்ளமும் இருக்க வேண்டும் என்பதையும், உப்பு போன்ற கரிப்பான விஷயங்களை மனிதன் தவிர்க்க வேண்டும் என்பதையும் இவ்வரிகள் நமக்கு உணர்த்துகின்றன.
mummy சொன்ன பொன்ன பொன்ன கட்டுனா torture இல்ல டா
நீயும் டாவடிக்கும் பொன்ன கட்டுனா trouser அவுரும் டா!
- எவ்வளவு புகழ்பெற்ற வீரனாயிருப்பினும், தான் எந்த ஒரு பெண்ணை விரும்பியிருந்தாலும், தன் தாயார் கட்டளையிட்டு ஒரு பெண்ணை மணந்து கொள்ளுமாறு கூறினால், அவனால் மறுக்க முடியாது. இது, அக்காலத்து ஆண்மகன்கள் தனது தாயாருக்குக் கொடுத்து வந்த மரியாதையயிக் குறிக்கிறது.
கண்ண கலங்க வைக்கும் figure வெணாம் டா
நமக்கு கண்ணீர் அஞ்சலி poster ஒட்டும் நன்பன் போதும் டா!
- காதல் பல நேரங்களில் சோகத்திலே தான் முடியும் போலும்.
- 'figure' என்பது இளவடடத்தார், தன்-வயதொத்த பெண்டிரைக் குறிப்பதாய் எடுத்துக் கொள்வது தவறு. பூமியில் எந்த ஒரு பொருளும் ஏதேனும் ஒரு உருவம் கொண்டிருக்கும். அவ்வுருவும் என்றேனும் ஒரு நாள் அழியக்கூடும். அப்படி "அழியக்கூடிய ஒரு பொருளையும் அதன் உருவத்தையும் காதலிப்பது மடமையே" என்ற வாழ்வியல் தத்துவத்தைக் கவிஞர் இங்கு நமக்கு உணர்த்துகிறார்.
- மேலும், ஒருவன் உயிர் துறந்துவிட்டால், அவனது நண்பன் படும் வேதனையையும் கவிஞர் இங்கு அழகைக் கூறுகிறார்.
bike-குல தினமும் ஒண்ணா போனோம், back-குல இப்ப அவள காணும்
beach-சுல சுகமா கடல போட்டோம், கடலுக்கும் இப்போ கண்ணீர் முட்டும்
- காதலி, எப்பொழுதும் தன் காதலனைப் பின்தொடர்ந்தே செல்வது வழக்கம். இது பெண்ணடிமைத்தனம் அல்ல. ஒரு பெண்ணின் வெட்கத்தையும் தான் கொண்ட மரியாதையையும் வெளிபடுத்துகிறது.
- கடற்கரையில் அமர்ந்துகொண்டு காதல் சோடிகள் அன்றாடம் உண்ணும் வேர்க்கடலை, 'மல்லாட்டை' என்றும் அழைக்கப்படுவதுண்டு. அதன் உண்மையான சொல் 'மனிலாக்-கொட்டை' என்பதாகும். தற்போதைய Philippines நாட்டின் தலைநகரமான மணிலா-விலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வெந்தது வரலாறு. இது தமிழக வணிகத்தாரின் திறமைக்கோர் பெரும் சான்றாகும்.
காதலிக்கும் போது, அட கண்ணு தெரியாது
உன் கண்ணு முழிச்சிக்கிட்டா அங்க காதல் கிடையாது
- கம்ப இராமாயணத்தில், "அண்ணலும் நோக்கினான். அவளும் நோக்கினான்." என்ற வரி உண்டு. இது, காதல் ஏற்பட்ட பிறகே நடந்ததாய் பலர் கூறுவர். "காதலுக்குக் கண்ணில்லை" என்ற தமிழ்ப் பழமொழியே இங்கு கூறப்பட்டுள்ளது.
அவ போனாளே போனா, தண்ணீர விட்டு மீனா
காயம் பட்ட மைனா, நான் பாடுறேன் கானா!
- ஒருவன், தான் காதலித்த ஒரு பெண், தன்னை விட்டுப் பிரிகையில், தண்ணீரை விட்டுப் பிரிந்த மீனைப் போலவும், காயம் பட்ட ஒரு மைனாவைப் போலவும், மனம் சோகத்தில் ஆழ்ந்து, அவன் கவிதை புனைந்து பாடுவதை, கவிஞர் இங்கு அழகாக எடுத்துரைக்கிறார்.
figure-உ sugar-உ மாதிரி, ஜனக்கு ஜனக்கு வவ்வாலு
நட்பு தடுப்பு ஊசி டா, ஜனக்கு ஜானு கோபாலு
- "அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" என்பதைப் போல் தித்திப்பான காதலும் ஒரு கட்டத்தில் திகட்டிப்போய் மனதிற்குக் கேடாகலாம். ஆனால் நட்போ, எந்நிலையிலும் நம்மைத் தீயவற்றிலிருந்து காத்துக் கொண்டே இருக்கும்.
figure-உ sugar-உ மாதிரி, பசங்க உடம்ப முறிக்கிடும்
நட்பு தடுப்பு ஊசி டா, உடைஞ்ச மனச தேத்திடும்!
- தன் காதலியின் ஒற்றைச் சொல் போதும், தன் மனதை முறிப்பதற்கு. அப்படிப்பட்ட நிலையில் தனது நண்பன் தன் மனக்ககாப்புகளை எல்லாம் அகற்றுவான் - என்பது பொருள்.
பாதியில் வந்த பொன்ன நம்பி, ஆதியில் வந்த நட்ப விட்டேன்
தேதிய போல கிழிச்சுப்புட்டா, தேவதை அவள நம்பி கெட்டேன்!
- இளவேனில், முதுவேனில், கார், குளிர், முன்பனி, பின்பனி - இவை வருடத்தின் ஆறு காலங்கள். தமிழுக்கென்று தனியாக எண்களும் உள்ளன. தமிழில் காலத்திற்குக் கொடுக்கப் பட்டிருந்த முக்கியத்துவத்தை இதிலிருந்து ஒருவாறு அறியலாம்.
- வாழ்வு முழுவதும் உடன் வராமல், ஒரே நாளில் தன்னைத் தூக்கி எரிந்து விட்டதை எண்ணி, காதலன் வருந்துவதை, இவ்வரிகளில் காணலாம்.
தோலு மட்டும் வெள்ள, அவ கவுத்துப்புட்டா மெல்ல
என்ன பண்ணி என்ன, அட அப்பவே நான் சொன்னேன்!
அவ போட்டாளே போட்டா, நல்ல திண்டுக்கல்லு பூட்டா
ஒரு சாவி கொண்டு வா டா, என்ன திறந்து விடேன் டா!
- அனேகமாக இப்பாடலில் வரும் காதலன், ஒரு அயல்-நாட்டுப் பெண்ணையோ, அல்லது அயல்-மாநிலத்துப் பெண்ணையோ கண்டு மையல் கொண்டிருக்க வேண்டும். ஏனெனில் அசல் தமிழ்நாட்டவரின் தோல் வெள்ளையாக இருந்ததாகத் தெரியவில்லை.
- இந்தக் காதலை, தன் நண்பன் நிராகரித்திருந்தும், தான் அதைக் கேளாது, இப்போது தொல்வியுற்றிருப்பதை, அவன் சுட்டிக் காட்டுவது, மனதிற்குக் கடினமே! எனினும், தன் காதலி போட்ட 'காதல்' எனும் பூட்டைத் திறக்க இயலாது தவிக்க, இப்பொழுதும் தன் நண்பனையே நாடுகிறான்.
கண்ணுல மைய வைப்பா டா, அதுல பொய்ய டா
உதட்டில் சாயம் வைப்பா டா, உனக்கு காயம் வைப்பா டா!
- கண்ணில் மை வைப்பது தொண்டு தொட்டு தமிழகத்தில் இருந்து வந்துள்ளது. உதட்டுச்சாயம் அவ்வளவு பழையதல்ல என்றாலும், சில ஊர்களில், இதுபோன்ற பழக்கங்கள் இருந்திருக்க வாய்ப்புள்ளது.
- ஆனால் மையுடன் பொய்யையும் சேர்த்து வைப்பது, ஒரு மிகச்சிறந்த கற்பனை.
கண்ணுல மைய வைப்பா டா, அதுல பொய்யோ பொய்யய்யோ
உதட்டில் சாயம் வைப்பா டா, உனக்கு கையோ கையய்யோ!
- இந்த வரிகளின் சுவாரஸ்யம் என்னவென்றால், இவற்றை, பெண்களே பாடியிருப்பர். பெண்ணைப் பற்றிய விமர்சனத்தைப் பெண்களையே பாடவைத்தது அருமையிலும் அருமை.
எழுத்தாளர் குறிப்பு:
- இவர் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி ஆகிய நூல்களைக் கரைத்துக் குடித்து ஏப்பம் விட்டதாகக் கூறிக்கொள்ள விரும்பவில்லை.
- வருங்காலத்தில் இவர் சிறந்த எழுத்தாளருக்கான ஆஸ்கர் விருதினை வாங்கக்கூடிய திறமை உள்ளதாக நம்புகிறார்.
- மேலும், பத்மஸ்ரீ. கமலஹாசன் அவர்களைப் போல், எளிதில் புரிந்துகொள்ள இயலாத ஒரு கவிதையோ, கட்டுரையோ, அல்லது வெறும் கடுதாசியாவது எழுத வேண்டும் என்பதே இவரது வாழ்நாள் ஆசையாகும்.
Comments
நகலக நாயகர் ஹாரிஸ் // சூப்பருபா...