வாழ்க்கை

வாழ்க்கை

வாழ்க்கை ஸ்தம்பித்தது. இருள் அவன் அருகில் நின்றுகொண்டு வெளிச்சத்தை சிறிதும் எட்ட விடாமல் இறுமாப்புடன் சிரித்தது. நீர் வற்றிப்போய் கண்கள் செய்வதறியாது தவித்தன. உடலில் உள்ள ஒவ்வொருதுளிக் குருதியும் உறைந்தது. தலை சுற்றியது. மனம் மூழ்கியது. இவை அனைத்தும் இவ்வாறிருந்தும்கூட அப்பொழுதும் மூளை வேதாந்தம் பேசியது. கடந்த சில வருடங்களாக தொடர்ந்து மூளையை மட்டுமே கேட்டு நடந்ததற்கான விளைவு - சற்று முன் நிகழ்ந்தேறியது.

நேற்றைய முன் தினம்

"டேய் நீ உள்ள வரப்போறியா இல்லையா?", என்றாள் வாசுகி.

"கோவிலுக்குள்ள தான் உங்க சாமி இருக்கா? ஏன், வெளிலேருந்தே கும்பிட்டா போறாதா?" தன் வழக்கமான மொழியில் கேட்டான் வாசுதேவன்.

"சரி, உன்ன திருத்த முடியாது! நா ஒரு பத்து நிமிஷத்துல வந்துட்றேன், கொஞ்சம் இங்கேயே இரு! பொண்டாட்டிய விட்டுட்டு போன பாவத்த வாங்கிக் கட்டிக்காத!" என்று செல்லமாக சொல்லிவிட்டு உள்ளே சென்றாள்.

"சரி, போறது தான் போற, அப்படியே எனக்கும் சேர்த்து ஏதாவது வேண்டிக்கோ!"

"இவனுக்கு இனிமேலாவது நல்ல புத்திய குடு-ன்னு வேண்டிக்கறேன்" என்று சொல்லிக்கொண்டே சென்றுவிட்டாள்.

தன் இருசக்கர வாகனத்தில் அமர்ந்துகொண்டு தன் மூத்த குணமான சோம்பேறித்தனத்தால் ஏதும் செய்யாமல் அமர, சதா-சுறுசுறுப்பான மனதோ பற்பல விஷயங்களைப் பேச ஆரம்பித்து.

வாகனத்தை கருப்பிற்கு பதிலாக சிவப்பில் வாங்கியிருக்கலாம்.
|
செவ்வானம் தான் எத்தனை அழகு!
|
அழகிற்கும் எனக்கும் எத்தனை தூரம்!
|
எனக்கும் இவளுக்கும் என்ன ஒரு பந்தம்!
|
பந்துக்களெல்லாம் எங்கு தான் உள்ளனர்!
|
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா!
|
ச்ச! வல்லவன் எவ்வளவு மட்டமான படம்!
|
படம் பார்த்து ரொம்ப நாளாச்சே! வாசுகிய கூட்டிட்டு இன்னிக்கு ஒன்னு போயிட்டுவர வேண்டியது தான்.
|
கோவிலுக்கு கூப்டா நாம போறதில்ல, படத்துக்கு கூப்டா மட்டும் அவ வரணும்-னு எதிர்பாக்கறது தப்பில்லையா?
|
நாலு பேர் நல்லா இருக்கணும்-னா எதுவுமே தப்பில்ல, ஆனா, நா ஒருத்தன் தானே!
|
ச்ச! அதுக்காக இன்னும் மூணு பேரையா கூட்டிட்டு போக முடியும்!
|
மூணு-படத்துல தனுஷ விட ஷ்ருதி ஹாசன் எவ்ளோ அழகு!
|
சொல்லபோனா வாசுகிய விட அழகா தான் இருந்தாங்க!
|
ஹ்ம்ம்ம்ம்ம்! இதையெல்லாம் யாருகிட்ட சொல்லி வருத்தப்பட்டுக்க முடியும்!
|
அவளுக்காவது சாமி இருக்கு, நமக்கு யார் இருக்கா!
|
அவளும் சாமி இருக்கு-ன்னு நம்பிண்டு இருக்கா, அவ்வளவு தான்.
|
தலைவர் சொன்னத தான் நானும் சொல்றேன்: "கடவுள் இல்லை-னு நா எப்ப சொன்னேன்! கடவுள் இருந்தா நல்லா இருக்கும்-னு தான் சொல்றேன்!"
|
அதெப்படி தான் எல்லாருக்குமே கமலஹாசனைப் பிடிடிக்குது-ன்னு தெரில!
|
"உனக்கு வேனும்னா ரஜினிய தான் பிடிச்சிருக்கலாம், ஆனா எனக்கு உன்ன தான் பிடிக்கும்"-னு சொல்லி காதலை வெளிப்படித்தினதிலிருந்து, இன்னிக்கு வரைக்கும் வாழ்க்கையில எல்லாமே வித்தியாசமா தான் இருக்கு.
|
சந்தோஷம்-நா என்ன-ன்னு மறந்தே போயிருந்த நா, இப்போ மறக்காம இருக்கற்து என்னோட ஒரே சந்தோஷமான வாசு தான்.
|
ரெண்டு பேருமே ஒருத்தர ஒருத்தர் 'வாசு'-னு கூப்பட்றது கூட ஒரு வகையான சிற்றின்பம் தான். இல்லை, பேரின்பம்.
|
ரமணி vs. ரமணி -க்குப் பிறகு நாங்க தான்!

"சரி, வாடா போலாம்"

"என்ன ரமணி, அதுக்குள்ளே வந்துட்ட?"

"யாரு அது ரமணி? அய்யாவோட முதல் காதலியோ?" என்றாள் வாசுகி, சிறிதும் சந்தேகம் இன்றி.

"ஹே! ச ச, அதெல்லாம் இல்ல!" என்றான் அவனும், குறும்பாக "ரமணி ரெண்டாவது"

"ஓ! அப்ப முதல் ஆளு யாருன்னு சொல்றேளா?" புன்னகைத்துக்கொண்டே.

"சொல்லலாமே! நீ தான்!"

"உன் மூஞ்சிக்கு நா ஒருத்தியே ஜாஸ்தி... சரி, வண்டி எடு, ஆத்துக்கு போலாம்"

யாருக்கும் வளையாத வாசு, வளைந்தது இன்னொரு வாசுவுக்கு மட்டும் தான். எனினும், வளையாமல் ஒழுங்கே சென்றது தன் இரு-சக்கர வாகனம்.

நேற்று காலை

"இந்தா டா காஃபி" என்று வாசு கையில் கொடுக்க நீட்டினாள்.

தொலைக்காட்சியில் செய்திகள் பார்த்துக்கொண்டிருந்தவன், "ஆஹா! நா வாழற்துக்கான முதல் காரனம் இதான். ரெண்டாவது தான் நீயே! சரி, கொண்டா!" என்று அதைப் பெற தானும் கை நீட்ட, கொடுக்கும் காஃபியை கொடுக்காமல், வாசு கேட்ட கேள்வி, அவனை முகம் சுளிக்க வைத்தது!

"பல் தேச்சியா இல்லையா?" என்றாள், தன் முதலாம்-வகுப்பு-ஆசிரியையைப் போல்.

ஏதும் சொல்லாமல் கையிலிருந்த தொலைக்காட்சி இயக்கியை அருகே வைத்துவிட்டு எதுவும் முணுமுணுக்காமல் போய் பல் தேய்த்துவிட்டு வந்தான்.

"சமத்த்த்த்த்து!" என்று அவன் கன்னம் கிள்ளி அவன் கையில் டவரா-டம்ப்ளரைக் கொடுக்க அவன் வழக்கம்போல் ஏதோ சொல்ல ஆரம்பிக்கையிலேயே அவனை வாயடைத்து, "போறும். நானே டிகாஷன்-ல தான் பால் விட்ருக்கேன். இதுக்கு மேலயும் டிகாஷன் விட்டா நன்னாருக்காது, ஏற்கனவே ஒரு முடி நரச்சு போயாச்சு!" என்றாள் அவனது பாட்டியைப் போல்.

"ஒன்னே ஒன்னு தானே! மயிரே போச்சு!"

"அப்போ மத்ததும் நரச்சுப் போயிட்டா?"

"மயிர்களே போச்சு! இலக்கணம் தெரியாத பொண்ணா இருக்கியே!" என்று சொல்ல, தன் தலையில் ஒரு குட்டு வாங்கியவனாக காஃபியைச் சுவைத்தான்.

"சக்கர தீர்ந்து போச்சா? இன்னும் கொஞ்சம் போட்றதுக்கென்ன!"

"நீ தான் ஏற்கனவே ரொம்ப ஸ்வீட்டாச்சே!" என்ற பதில் வந்தது உள்ளிருந்து.

"ஓஹோ! அப்டின்னா உனக்கும் இனிமே சக்கர கிடையாது!" என்று தன் நாளை இனிதே தொடங்கினான் வாசு.

நேற்று மதியம்

"ஏண்டா, நேத்திக்கி தான் ஏதோ வேல இருக்கு-ன்னு வெளில போயிட்ட. ஞாயித்திக்கிழம, இன்னிக்கு ஒரு நாளாவாது டி.வி, கம்ப்யூட்டர், லேப்டாப் - இதெல்லாம் இல்லாம இருக்க முடியாதா?" என்று சமையலறையிலிருந்து சத்தமாகக் கேட்டாள் வாசு.

"ந்யூஸ் படிச்சுண்ட்ருந்தேன்டி! இன்னிக்கு விஸ்வரூபம் படத்தோட இன்னொரு ட்ரெய்லர் வந்திருக்காம், அதான் பாத்துண்ட்ருக்கேன்!"

"என்னையும் கூப்ட கூடாது?" என்று போட்டது-போட்டபடி விட்டு, ஓடோடி வந்து அவன் முதுகில் சாய்ந்துகொண்டு லேப்டாப்பை நோக்கியவண்ணம் நின்றாள்.

ட்ரெய்லர் முடிந்ததும் அவள் ஏதும் சொல்லாமல் வாடிய முகத்துடன் மீண்டும் சமயலறைக்கே சென்றது அவனுக்கு வருத்தமளித்தது. காரணம் அறிந்தவனாக, "ஒரு வருஷமா அவர் படத்த ரிலீஸ் பண்ணலைன்னா நா என்ன பண்ண முடியும்!" என்றான் சிரித்துக்கொண்டே. "சரி சரி, சாப்பட்லாம் வா, பசிக்கற்து!"

"இன்னும் பத்து நிமிஷம் ஆகும், அதுக்குள்ள மருதநாயகம் ட்ரெய்லர் ஏதாவது ரிலீஸ் பண்ணிருக்காரா-ன்னு பாரு!" என்றாள், அவளும் தன் பங்கிற்கு.

"நீ வேணும்-னா பாரேன், மருதநாயகத்துல நம்ம பொண்ணு தான் கமலுக்கு ஜோடி!"

"ஆமாமாம்! நடந்தாலும் ஆச்சரியப்படறதுகில்ல! அது சரி, பையன் வேண்டாமா?"

"காதுல விழல, என்னது?"

"ஒண்ணுமில்லையே" என்று ஒரு புன்னகையுடன் காரியங்களைச் செய்தாள்.

நேற்று மாலை

"ஏற்கனவே ரெண்டு காஃபி ஆயிடுத்து, இது தான் கடைசி! சொல்லிட்டேன்!"

"இருக்கற்து ஒரு வாழ்க்க! அது காஃபி-னால தான் போகணும்-னா போகட்டுமே!"

மீண்டும் ஒரு குட்டு.

"வர வர உன்னக்கு கை ரொம்ப நீண்டுண்டே போறதே! சரி, அப்டியே, அந்த ரிமோட்ட எடுத்துக்குடு..."

"டி.வி அப்புறம் பாக்கலாம். உங்கிட்ட கொஞ்சம் பேசணும்."

"டி.வி பாத்துண்டே பேசலாமே"

"உனக்கு நா முக்கியமா, டி.வி முக்கியமா?"

"டி.வி தான்!"

"ஒத வாங்குவ! சொல்றத கேளு"

"அதான் இத்தன நாளா கேட்டுண்ட்ருக்கேனே! சொல்லு!"

"நாளைக்கு டாக்டர பாக்க போலாமா?"

"ஏன், அவங்கள பாத்து ரொம்ப நாளாச்சா? இல்ல, அவங்களுக்கெதாவது ஒடம்பு கிடம்பு சரியில்லையா?"

"அடிச்சேன்னா! எனக்கு தான் சரியில்ல."

"என்ன பிரச்சன-ன்னு சொல்லு, நானே பாக்கறேன்!"

"வேண்டாம், நீ என்ன டாக்டர்-ட அழச்சுண்டு மட்டும் போ, நா அவங்ககிட்டயே பாத்துக்கறேன்."

"சரி, அழச்சுண்டு போறேன்... என்ன-ன்னு தான் சொல்லேன்!"

"ம்ம்ஹும்ம்! நாளைக்கு சொல்றேன்..." என்று ஒரு சின்ன இழுவையுடன் சொல்லிவிட்டு, "சரி, காஃபி எப்படி இருக்கு?"

"நீ போட்ற காஃபி நன்னாருக்கு-ன்னு சொல்லி சொல்லியே எனக்கு வயசாயிடும்!" என்று கூறி ரிமோட்டை எடுத்து தொலைக்காட்சியில் மூழ்கிப்போனான்!

"உனக்கு என்னிக்கு தான் பொறுப்பு வரப்போறதோ தெரில" என்று அவன் தலைமயிரைக் கலைத்துவிட்டு உள்ளே சென்றாள் வாசு.

இன்று காலை

"வாசு! ஆஃபீஸுக்கு நேரமாச்சு மா, காஃபி எங்கே?"

"இதோ வறேன் இரு" என்று அடுத்த சில வினாடிகளில் அவனிடம் காஃபியைக் கொடுத்தாள்.

ஒரு வாய் குடித்துசிட்டு, "காஃபி-ல ஒன்னும் ஸ்பெஷல் இல்ல, ஆனா அம்மையார் என்ன, ரொம்பவே ஸ்பெஷலா இருக்கீங்க?"

"ஹே, ஸ்பெஷல்-லாம் ஒண்ணுமில்ல. அதான் டாக்டர்-ட போணும்-னு சொன்னேன்-ல? அதுக்கு தான்."

"அச்சச்சோ, மறந்தே போச்சே! ஞாபகப்படுத்திருந்தீன்னா கொஞ்சம் முன்னாடியே கெளம்பிருக்கலாம் ல?"

"சரி, இப்ப தான் என்ன? அர-நாள் பர்மிஷன் கேக்க முடியாதா உன்னால?"

"உனக்காக, அர நாள் என்ன, வாழ்நாள் பூரா பர்மிஷன் போடலாம், ஆனா இப்போ வந்து கேக்கறியே!" என்று அவள் கன்னத்தைக் கிள்ளி சமாதானம் சொல்ல முயன்றான்.

வாசுவோ தன் தலை குனிந்தவளாக, "எனக்காக இன்னிக்கு ஒரு நாள் லீவ் போடக் கூடாதா?" என்றாள், மிட்டாய்-கிடையாது-என்றவுடன்-முகம்-மாறும்-குழந்தையைப்-போல.

"ப்ச்! சரி, நா ஒன்னு பண்றேன், நீ முதல்ல ஒரு ஆட்டோ எடுத்துண்டு கிளம்பி ஹாஸ்பிடல் போயிடு, நா ஆஃபீஸ் போயி, ஏதாவது சொல்லிட்டு அங்க வந்துடறேன். ஓ கே?" என்றான் முகத்தருகில் வந்து.

"ஹ்ம்ம்ம்ம், சரி. ஆனா சீக்கிரம் வந்துடணும், என்ன?" என்று தலையாட்டிக் கொண்டே கேட்க, அவனும் மிண்டும் ஓர் முறை கன்னத்தைக் கிள்ளிவிட்டு தன் முதல் மனைவியான இரு-சக்கரத்தில் கிளம்பிச் சென்றான்.

வாசுவும் வீட்டைப் பூட்டிக்கொண்டு தெரு முனையில் தான் வழக்கமாகச் செல்லும் ஆட்டோவில் ஏறி மருத்துவமனை கிளம்பினாள்.

"சேகர், என் வீட்டுக்கார் ஃபோன் நம்பர் உங்களுக்குத் தெரியும் ல?" என்றாள் வாசு, ஆட்டோக்காரனிடம்.

"ஆங், தெரியுங்கா! இன்னாத்துக்கு கேக்கற கா? போன் பண்ணுமா? இந்தா கா செல்லு..." என்று தன் கைப்பேசியை எடுக்க விழைந்தான்.

"இப்ப வேண்டாங்க, என் ஃபோன ஆத்துலயே...இது...வீட்டுலயே வச்சிட்டு வந்துட்டேன். அங்க ஹாஸ்பிடல் போனதும் அவருக்கு ஒரு ஃபோன் பண்ணி, நா வந்து சேர்ந்துட்டேன்-னு நீங்களே சொல்லிட்றீங்களா? அவர் வந்து என்ன அழச்சுண்டு போறேன்-னார்"

"சரி கா, நானே ஸார்-ட சொல்லிடறேன்" என்றார் சேகர்.

சில நிமிடங்களுக்கு முன்...

"ஓ கே! ஆல்ரைட். தாங்க் யூ! நா மத்தியானம் எவ்ளோ சசீக்கிரம் வர முடியுமோ வந்துட்றேன் ஸார்! தாங்க்ஸ் எகெய்ன்! பை!" என்று கூறி அந்த அழைப்பைத் துண்டித்த மறுகனமே இன்னொரு அழைப்பு வந்தது. சேகரிடமிருந்து.

"யா, சொல்லுங்க சேகர்! வாசு உங்க ஆட்டோ-ல தான் வந்துருப்பாங்க-ன்னு நெனக்கறேன். நா இப்ப தான் அங்க வர கிளம்பின்ட்ருக்கேன். சொல்லுங்க!"

"ஸார்... ஸார்... நா இங்க ஹாஸ்பிட...." சேகர் குரல் தடுமாறியது. அவர் முச்சு விடவே கஷ்டப்படுவது தெரிந்தது. "ஹாஸ்பிடல் ரோட்டு பக்கம் திரும்பையில..."

"அச்சோ, என்னாச்சு சேகர்! உங்களுக்கு ஒண்ணும் இல்லையே? வாசு?"

"ஒரு கார்-காரன் மோதிட்டான். அம்மா-வுக்கு... அம்மா-வுக்கு மண்டையில அடி பட்டிருக்கு! நம்ம ஆஸ்பத்திரி-ல தான் சேத்துருக்காங்க... நீங்க... நீங்க சீக்கிரம் வாங்க..." என்று தட்டுத் தடுமாறி பேசியதும் அழைப்பு துண்டிக்கப்பட்டது.

சொல்வதறியாது, செய்வதறியாது, உடனே அலுவலகத்தை விட்டு கிளம்பி அடுத்த சில நிமிடங்களில் மருத்துவமனையை அடைந்து, அங்கு விசாரித்து, ஐ.சி.யூ இருக்கும் திசை பாய்ந்தோடினான்.

வாசலில் நின்றுகொண்டிருந்த உதவி மருத்துவர்களைஎல்லாம் தள்ளிவிட்டு உள்ளே சென்றதும் அவன் கண்கள் வாசுவைத் தேடின. கண்ட மறுகணம் அவள் அருகே ஓடி, உள்ளிருந்த பயத்தையெல்லாம் பூட்டி வைத்தவனாக, "ஒண்ணுமில்ல வாசு! நா வந்துட்டேன் வாசு! இங்க பாரு வாசு!" என்று நடுநடுங்கினான்.

"டாக்டர்! வாசு-க்கு என்னாச்சு டாக்டர்!" என்று தலை நிமிர, அவர் அவன் அருகில் வந்து, "ஐம் சாரி சார்! தலைல ரொம்ப பலமா அடி பட்ருக்கு. இனிமே எங்களால ஒண்ணும் பண்றதுக்கில்ல, இன்னும் ஒண்ணு ரெண்டு..." என்று தயங்கியவர், " இன்னும் ஒண்ணு ரெண்டு நிமிஷம் தான்.... அப்புறம்..." என்று அவன் தோளில் கை வைத்தவராக ஆறுதலாய் அருகில் நின்றார்.

"வா... வாஹ்... வாஹ்ஸ்..."

"வாசு! சொல்லு வாசு! நா வந்துட்டேன் வாசு! இங்க பாரு! நா எங்கயும் போல! நீயும் எங்கயும் போயிடாத வாசு!" அவள் உள்ளங்கையை இறுகப் பிடித்துக் கொண்டான். அவன் கண்ணீர்த் துளிகள் அவள் கன்னகங்களை நனைத்தன.

"பொ... பொண்ணு... பொண்ணு தான்-னு தோன்றது... ஹஹ்....ஹஹ்..." தனது இறுதியான ஓரிரு வார்த்தைகள் என்று அவளுக்குத் தெரிந்திருந்தது. "இப்பஹ்... இப்ப சொல்லுஹ்... பொண்ணா பையனா?" என்று கேட்டதும் அவன் தன் தலையை அவள் மேல் வைத்து தன் கண்ணீரினால் பேச வேண்டியதையெல்லாம் பேசினான்.

இப்பொழுது

சில நொடிகளில், அனைத்தும் புரிந்தவளாக "அழாஹ்... அழாத... நா... நா போ.... நா போயிட்டு வ...." என்று திரும்பி வராமல் கிடந்தாள்.

வாழ்க்கை ஸ்தம்பித்தது. இருள் அருகில் நின்றுகொண்டு அவன் அருகில் வெளிச்சத்தை சிறிதும் எட்ட விடாமல் இறுமாப்புடன் சிரித்தது. நீர் வற்றிப்போய் கண்கள் செய்வதறியாது தவித்தன. உடலில் உள்ள ஒவ்வொருதுளிக் குருதியும் உறைந்தது.

தலை சுற்றியது.

மனம் மூழ்கியது.

வாழ்க்கை ஸ்தம்பித்தது.

-முற்றும்.

Comments

Popular posts from this blog

A Tamilian's Tribute to an Apple

Day 3 - 16th Dec. 2012

Mahabalipuram - a little journey