கானல் காணல்

அருவமே கொண்ட அகிலத்தான் தனை
ஆதியி லாதவன் ஆதவன் தான்தனை
இன்னா இருப்பினும் இனியவன் இறைவனை
ஈன்று இளைத்திடா ஈகையுள்ளான் தனை
உருவத்தில் உடுக்கி உரைத்திடக் கண்டேன்
ஊமை நானொரு ஊகமும் கொண்டேன்
எண்ணம் பிசகி எழாமல் இருக்கையில்
ஏக்கம் பெருகும் ஏவுதல் கண்டேன்
ஐம்பொருள் படைத்தானை ஐந்திணை செய்தானை
ஒருவரும் ஒழுங்கே ஒழுகாது ஒருபுறம்
ஓதிக் காலம் கழித்திடக் கண்டேன்

கற்றளி கண்டேன் கற்றளி கண்டேன்
கற்றளி எல்லாம் கற்கள் கண்டேன்
கர்ப்ப க்ரஹமென் றோரறை கண்டேன்
கல்லுளி கண்ட கண்ணிரு கண்டேன்

சாதிகள் கண்டேன் சாத்திரம் கண்டேன்
சந்ததி யெல்லாம் சாய்ந்திடக் கண்டேன்
சாதிப்போ ரையும் சனங்கள் சூழவும்
சாதிப் போரொன்று செழித்திடக் கண்டேன்

தாமிரம் கண்டேன் தங்கமும் கண்டேன்
தந்தமும் ஆங்காங்கு தேய்ந்திடக் கண்டேன்
தீண்டா வகுப்பினர் தவித்தே யிருக்க
திண்பண்ட மெல்லாம் தீயினில் கண்டேன்

நான்முகன் கண்டேன் நன்கறிந்தவர் கண்டேன்
நன்னாற்றமே கொண்ட நாணயத்தார் கண்டேன்
நீருமே இலாது நிற்பார் இருக்கையில்
நால்வேதம் ஊரெலாம் நலம்பெறக் கண்டேன்

பொற்சிலை கண்டேன் பொற்சிலை கண்டேன்
பன்னீரும் பழமும் பாலும் பருப்பும்
பூவும் பணமும் சந்தனக் கரைசலும்
படைத்தவன் பேரில் இரைத்திடக் கண்டேன்

மாளிகை கண்டேன் மாடவீதியும் கண்டேன்
மேல்வகுப்பா ரென்ற மூடமும் கண்டேன்
மேகத்தை நோக்கியே மேநலம் கூறுவர்
மனிதனை ஒருநாளும் மதியாதது கண்டேன்

இராமனைக் கண்டேன் இராவணன்களைக் கண்டேன்
இராமன் உருகொண்ட இராவணன்களும் கண்டேன்
அரங்கனே அகம்வந்து அறிவுரை உரைத்தாலும்
ஏற்காத ஊரினில் ரௌத்திரம் கண்டேன்

வாழ்க்கையைக் கண்டேன் வாழ்வாரையும் கண்டேன்
வஞ்சகத்தார் கூறும் வாசகம் கண்டேன்
வலியார் வாழ்வினில் வாசமே இலாது
வாடி வதங்கி வலித்திடக் கண்டேன்.

-வ.ர.ராகவன்.

Comments

Popular posts from this blog

A Tamilian's Tribute to an Apple

Day 3 - 16th Dec. 2012

Day 2 - 16th Dec. 2012 - I